Archives: பிப்ரவரி 2017

இருளில் ஒரு நமுட்டுச் சிரிப்பு

வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கையில், பீட்டர் தையிலே (Peter Thiele) மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மனித வாழ்வை காலவரையின்றி நீடிக்கச் செய்யும் முயற்சிகளைக் குறித்து, “தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சமீபத்திய திட்டப்பணி: மரணத்தை மீறிடு” என்ற தலைப்பில் ஆரியானா சா (Ariana Cha) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த திட்டப்பணிக்காக பல கோடிகளைச் செலவழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

ஆனால், அவர்கள் சற்று காலதாமதமாக வந்து விட்டனர். ஏனென்றால் மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,” என்று இயேசு கூறியுள்ளார் (யோவா. 11:25-26). தன் மீது விசுவாசம் வைக்கிற எவனும் ஒருபோதும், எச்சூழ்நிலைமையிலும் சாகவே சாவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது நம்முடைய சரீரங்கள் மரித்துப்போகும். அதைக்குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் “நான்” என்று நாம் கூறும் நம்முடைய சுயம், அதாவது சிந்தித்தல், பகுத்தறிதல், நினைவுகூறுதல், நேசித்தல் போன்ற சாகச பகுதி ஒருபோதும் சாகவே சாவதில்லை.

மேலும் இதன் சிறப்பு என்னவெனில், இது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற ஒரு ஈவு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, இயேசு நமக்களிக்கும் இரட்சிப்பை நாம் பெறுவதே. இவ்வன்பளிப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது, இவ்வளவு பெரிய காரியத்திற்கு இவ்வளவு எளிமையானதொரு பதிலா என்கிற உணர்வு ஏற்படுகிறது என்று சி. எஸ். லூயிஸ் தெரிவிக்கிறார். ஆகவே அதை “இருட்டில் ஒரு நமுட்டுச்சிரிப்பு” போல என விவரிக்கிறார்.

சிலர் இதைக்குறித்து, “இது மிகவும் எளிமையாக உள்ளதே,” என்கின்றனர். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை நேசித்து நீங்கள் என்றென்றும் அவரோடே வாழ வேண்டும் என்று அவர் விரும்பும்பொழுது, எதற்காக அவ்வழியை கடினமாக அமைத்திடுவார்?

கண்களால் காண முடியாத மோதிரம்

கிரேக்க தத்துவஞானியாகிய பிளாட்டோ (கி.மு. 427 - கி.மு. 348) மனித இருதயத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓர் கற்பனை வழியை கையாண்டார். பூமியின் ஆழத்திலே நன்கு புதைந்து மறைந்து கிடந்த ஒரு தங்க மோதிரத்தை எதேச்சையாக கண்டுபிடித்த மேய்ப்பனைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையை கூறினார். ஒரு நாள் ஓர் பயங்கர நிலநடுக்கம் பழங்கால மலைக்கல்லறை ஒன்றை பிளந்து அந்த மோதிரத்தை அம்மேய்ப்பனுக்கு வெளிப்டுத்தியது. அதுமட்டுமன்றி, அந்த மோதிரத்திற்கு மந்திர சக்தி உள்ளதையும் அதை அணிபவர் மற்றவர் கண்களுக்கு தெரியாவண்ணம் மாயமாய் மறைந்து போக முடியும் என்பதையும் எதேச்சையாக அம்மேய்ப்பன் அறிந்துகொண்டான். மாயமாய் மறைந்து போவதைக் குறித்து எண்ணும் பொழுது பிளாட்டோ ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது மனிதர்கள் தாங்கள் பிடிபட்டு, தங்கள் தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கக் கூடும் என்கிற கவலை அவர்களுக்கு இல்லாதிருந்தால், தீமை செய்ய அவர்கள் தயங்குவார்களா என்பதே கேள்வி.

யோவான் சுவிசேஷத்திலே இக்கருத்தை இயேசு வேறொரு கோணத்தில் சொல்வதை நாம் காணலாம். நல்ல மேய்ப்பன் என அழைக்கப்படும் இயேசு, தங்களுடைய செயல்கள் வெளியரங்கமாகிவிடாதபடி தங்களுடைய இருதயங்களை இருளின் போர்வைக்குள் மறைத்துக்கொண்டிருப்பவர்களைக் குறித்துப் பேசுகிறார் (யோவா. 3:19-20). தங்களுடைய தவறுகளை மூடி மறைத்து வைக்க நினைப்பதை சுட்டிக்காட்டி நம்மை குற்றப்படுத்த அவர் விரும்பவில்லை, மாறாக அவர் மூலமாக அவர் அளிக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, அவரின் வெளிச்சத்திற்குள் நம்மை அழைக்கிறார் (வச. 17). நம்முடைய இருதயங்களின் மேய்ப்பவராகிய அவர் மனுஷ இருதயங்களில் உள்ள மிக மோசமான காரியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதின் மூலம் தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறார் (வச. 16).

தேவன் தம்முடைய இரக்கத்தின் ஐஸ்வரியத்தினாலே இருளில் இருக்கும் நம்மை ஒளியிலே அவரைப் பின்பற்றி நடக்க அழைக்கிறார்.

முழுமையாய் நெருங்கிச் சேருதல்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு கால்ஃப் (Golf) போட்டியைக் காணும்படி என்னுடைய நண்பர் என்னையும் தன்னோடு அழைத்துச் சென்றார். முதல் முறை என்பதால் அங்கு எதை எதிர்பார்ப்பது என்று கூடத் தெரியவில்லை. அங்கு வந்து சேர்ந்த பொழுது, சில பரிசுப்பொருட்கள், தகவல் அட்டை, கால்ஃப் மைதான வரைபடம் ஆகியவற்றை கொடுத்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவ்விளையாட்டின் 18வது நிலையில், முக்கிய பிரமுகர்கள் கண்டுகளிக்கும் கூடாரத்திற்கு அனுமதி கிடைத்தது. அங்கு எங்களுக்கு அமர இருக்கைகளும் இலவச உணவும் கிடைத்தது. நான் தனியாக வந்திருந்தால் இந்தக் கூடாரத்திற்கு வர எனக்கு அனுமதி கிடைத்திருக்காது. ஆனால் இப்பொழுது அது கிட்டியதற்கு காரணம் என் நண்பர். அவர் மூலம் தான் எனக்கு முழுமையான அனுமதி கிட்டியது.

எந்த உதவியுமின்றி நாம் விடப்பட்டிருந்தால், நாம் அனைவரும் பரிதாபத்திற்குரிய நிலையில் தேவனை விட்டு துண்டிக்கப்பட்டே இருந்திருப்போம். ஆனால், நம்முடைய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டதால், அவருடைய ஜீவனையே நமக்களித்து, தாம் தேவனிடம் கிட்டிச்சேர அனுமதி அளித்துள்ளார். “அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்” (எபே. 3:10) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளார். கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக யூதனையும், கிரேக்கனையும் ஒன்றாக இணைத்த இந்த ஞானம், நாம் அனைவரும் பிதாவாகிய தேவனை கிட்டிச்சேர வழிவகுத்துள்ளது. “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (வச. 12).

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கும் பொழுது, நம்மோடு ஐக்கியம் கொள்ளப் பிரியப்படும் தேவனிடம், அளவற்ற அன்பு செலுத்தும் தேவனிடம் கிட்டிச்சேர உதவும் ஒப்பற்ற நெருக்கத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.

முழு இருதயத்தோடு!

காலேப் ‘முழு இருதயத்தோடு’ ஆண்டவரைச் சேவித்த உத்தமமான மனிதன். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை உளவுபார்த்து மோசேவுக்கும் மக்களுக்கும் அறிக்கை அளிக்கும்படி அனுப்பப்பட்ட 12 பேர் கொண்ட குழுவில் காலேபும், யோசுவாவும் இருந்தனர். “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்வோம்” (எண். 13:30) என காலேப் கூறினான். ஆனால் அந்தக் குழுவில் இருந்து 10 பேர் வெற்றிபெற இயலாது என கூறினார்கள். தேவன் அதை அவர்களுக்கு வாக்குப் பண்ணியுள்ளார் என்பதை அறிந்திருந்தும், தடைகளை மாத்திரமே அவர்கள் பார்த்தார்கள் (வச. 31-33).

இந்த 10 பேர் ஜனங்களை நம்பிக்கை இழக்கச்செய்து, தேவனுக்கு எதிராக முறுமுறுக்கச் செய்தார்கள். இதனால் அவர்கள் 40 ஆண்டுகள் வனாந்திரத்திலேயே அலைந்து திரிந்தார்கள். ஆனால் காலேப் தன்னுடைய நம்பிக்கையை இழந்து போகவேயில்லை. “என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் (முழுமனதுடன்) என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (14:24) என கர்த்தர் கூறினார். 45 ஆண்டுகள் கழித்து, காலேப் 85 வயதாய் இருக்கும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் (முழு இருதயத்தோடு) பின்பற்றினபடியினால்” (யோசு. 14:14) எபிரோன் பட்டணத்தை தனக்கென பெற்றுக்கொண்டான்.

பல நூற்றாண்டுகள் கழித்து, “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என இயேசுவை நோக்கி நியாயப்பிரமாண வல்லுநர் ஒருவர் கேட்ட பொழுது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை” (மத். 22:35-38) என இயேசு பதிலளித்தார்.

இன்றும்கூட, நம் முழு இருதயத்தோடு நாம் செலுத்தும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்பிற்கும் பாத்திரரான தேவன் மீது தான் கொண்ட விசுவாசத்தின் மூலம் காலேப் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோழமையான இலட்சியம்

நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் "ஈருடல் ஓருயிர்" போல ஆனதாகக் கூறினார்.

அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும்  பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் "ஒரே லட்சியமாக" கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று "ஒருவரையொருவர் ஊக்குவித்த" காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.

எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் "நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்" அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்" (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற "கசப்பான வேரை" (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.

விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?

பிரமிப்பிற்கான ஜன்னல்

புகைப்படக் கலைஞர் ரான் முர்ரே குளிர் காலநிலையை விரும்புகிறார். "குளிர் என்றால் தெளிவான வானம், அது பிரமிப்பிற்கான ஒரு ஜன்னலைத் திறக்கும்!" என்று அவர் விளக்குகிறார்.

அலாஸ்கா பகுதியில் பூமியின் மிகவும் கண்கவர் ஒளி நிகழ்ச்சியான அரோரா பொரியாலிஸ் (வடக்கு விளக்குகள்)-ஐ பிரேத்யேகமாக படம்பிடிக்க வழிகாட்டும் சுற்றுலா சேவையை ரான் வழங்குகிறார். முர்ரே, இந்த  அனுபவத்தை "தெய்வீகமானது" என்று விளக்குகிறார். நீங்கள் எப்போதாவது வானத்தில் வெவ்வேறு ஒளிகளிலும் வெவ்வேறாகத் தோன்றும் முனைப்பான பல வண்ணங்களை வெளிப்படுத்துகிற இந்த மாறுபட்ட காட்சியைப்  பார்த்திருந்தால், அது ஏன் தெய்வீகமானது என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

ஆனால் இந்த ஒளிவிளக்கு தோற்றங்கள் வடக்கு பகுதியில் மட்டுமல்ல. அதே வகையான ஒளிவிளக்குகளான அரோரா ஆஸ்ட்ராலிஸ், ஏறக்குறைய பொரியாலிஸைப் போன்றவை, தெற்கில் அதே நேரத்தில் நிகழ்கிறது.

கிறிஸ்துமஸ் நிகழ்வைப் பற்றி சீஷன் யோவான் கூறுவதில், அவர் தொழுவத்தையும் மேய்ப்பர்களையும் தவிர்த்துவிட்டு, நேரடியாக "மனுஷருக்கு ஒளியாயிருந்(த)தது" (யோவான் 1:4) ஒருவரைக் குறிப்பிடுகிறார். யோவான் பின்னர் ஒரு பரலோக நகரத்தைப் பற்றி எழுதுகையில், அதன் ஒளியின் ஆதாரத்தை விவரிக்கிறார். இந்த "நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு" (வெளிப்படுத்துதல் 21:23). இந்த ஒளியின் ஆதாரம் இயேசு; யோவான் 1ல் குறிப்பிடப்பட்ட அதே ஆதாரம். மேலும் இந்த வருங்கால இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு, “இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்” (22: 5).

அரோரா பொரியாலிஸ் மற்றும் ஆஸ்ட்ராலிஸை உருவாக்கிய உலகின் ஒளியானவரை வாழ்க்கை பிரதிபலிக்கும் போது, ​​உண்மையிலேயே ஒரு பிரமிப்பான வாசலைத் திறக்கிறோம்.